
விழுப்புரம் ரயில் நிலையத்தில் வழிகள் அடைப்பு: பயணிகள் அவதி
மேம்பால பணிகள் முடியும் வரை தபால் நிலையம் அருகே உள்ள வழியை திறக்க கோரிக்கை
விழுப்புரம்:
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாலம் மற்றும் கட்டமைப்பு பணிகளால் பல்வேறு வழிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 3, 4, 5, 6-வது நடைமேடைகளுக்கு செல்லும் பயணிகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் ரயில் நிலையம் தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கியமான ரயில் சந்திப்பாக விளங்கி வருகிறது. மேலும், வடமாநிலங்களான மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும், சீரடி போன்ற முக்கிய ஆன்மிக தலங்களுக்கும் செல்லும் ரயில்கள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன.
அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
சுற்றுச்சுவர் பணியால் வழிகள் மூடல்
இந்த நிலையில், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நவீனமயமாக்கல் மற்றும் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த சில வழிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக 3, 4, 5, 6-வது நடைமேடைகளில் ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் வெளியே வருவதற்கும், அந்த நடைமேடைகளில் ரயில் ஏறச் செல்லும் பயணிகளும் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ மீட்டர் வரை சுற்றிச்செல்லும் அவலம்
முன்பு ரயில் நிலையத்தில் இரண்டு மேம்பாலங்கள் மூலம் பயணிகள் நடைமேடைகளுக்கு எளிதாக சென்று வந்தனர். தற்போது ஒரு மேம்பாலம் அகற்றப்பட்டு புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் ஒரே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், ஒரே வழியாக அனைவரும் செல்ல வேண்டியிருப்பதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், சில நடைமேடைகளில் இருந்து வெளியே வருவதற்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அவதி
நீண்ட தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ரயில் புறப்படும் நேரத்தை கருத்தில் கொண்டு அவசரமாக நிலையத்திற்கு வரும் பயணிகளும், நடைமேடைகளில் இருந்து வெளியே செல்ல வேண்டிய பயணிகளும் கூடுதல் நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் ரயிலை தவறவிடும் சூழ்நிலையும் ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
தபால் நிலையம் அருகே உள்ள வழி மூடல்
இதற்கு மாற்றாக, ரயில் நிலையத்தில் தபால் நிலையம் அருகே உள்ள வழி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
3, 4, 5, 6-வது நடைமேடைகளில் இருந்து ரயிலில் வந்து இறங்கும் பயணிகள், இந்த வழியை பயன்படுத்தி எளிதாக வெளியே செல்ல முடிந்ததாகவும், தற்போது அந்த வழி கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் சிரமம் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த வழி ஏன் மூடப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் நோக்கில் வழி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழி மூடப்பட்டிருந்தாலும், தற்போது மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இந்த வழியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?
புதிய மேம்பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் வரை, தபால் நிலையம் அருகே உள்ள வழியை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், தேவையான இடங்களில் பாதுகாப்பு பணியாளர்களை நியமித்து, பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எம்.பி.க்கள் தனிக்கவனம் செலுத்த கோரிக்கை
இந்த பிரச்சினையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தனிக்கவனம் செலுத்தி, தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழுப்புரம் ரயில் நிலைய பயணிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண குரல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேம்பால பணிகள் நிறைவடையும் வரை தபால் நிலையம் அருகே உள்ள வழியை பாதுகாப்புடன் திறந்து வைத்தால், 3 முதல் 6-வது நடைமேடைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். எனவே, தென்னக ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.#news32