
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்தம் இல்லாத இடத்தில் வாகனங்களுக்கு கட்டணம்?
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
விழுப்புரம்:
விழுப்புரம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்துமிடத்தில், ஒப்பந்தம் விடப்படாத பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்துக்குள் நுழைந்ததும் வலதுபுறத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளிடம் மட்டுமே வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவல் நிலையம் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும், இன்னும் பயன்பாட்டுக்கு முழுமையாக திறக்கப்படாத பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் பயணிகளிடமும் சிலர் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், அந்த இடத்திற்கு இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படாத நிலையில், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கட்டணம் வசூலிக்கும்போது முறையான ரசீது வழங்கப்படாமல், போலியான பில் மூலம் வசூல் செய்யப்படுவதாகவும் சில வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த கட்டண வசூலில் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் தொடர்பு இருப்பதாக சில பொதுமக்கள் மற்றும் அங்கு வாகனங்களை நிறுத்தும் பயணிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சிலர் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு வாகன நிறுத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, எந்தெந்த பகுதிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி உள்ளது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஒப்பந்தம் வழங்கப்படாத பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறையான அனுமதியின்றி கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து, பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.