
விழுப்புரத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் மீண்டும் செயல்படுமா?
பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், வடக்கு மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் 24 மணி நேரமும் விழுப்புரம் வழியாக இயக்கப்படுவதால், புதிய பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் முன்பு செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த முன்பதிவு மையம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய புதுச்சேரி செல்லும் நிலை
முன்பதிவு மையம் செயல்படாததால், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நேரடியாக முன்பதிவு செய்ய விரும்பும் விழுப்புரம் பயணிகள், புதுச்சேரிக்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருந்தாலும், விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் பயணிகள் முன்பதிவு செய்வதால், தங்களுக்கு தேவையான நேரத்தில் இருக்கைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஊழியர்கள் பற்றாக்குறையா?
முன்பதிவு மையம் மூடப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டபோது, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் என கூறப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெளிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
24 மணி நேரமும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்லும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் முன்பதிவு மையம் இல்லாதது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
எனவே, தமிழக அரசும், சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையத்தை மீண்டும் விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. #tn32news