வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே கழிவறை சுத்தம்! மாணவர்கள் புகாரால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் ஆனந்த்!
தலைமையாசிரியரை கடுமையாகக் கடிந்த அமைச்சர் – தினமும் கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவு!**
**
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வா.பகண்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சாக்லெட் வழங்கிய அமைச்சர், பள்ளியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாணவர்கள், பள்ளியில் உள்ள கழிவறைகள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்யப்படுவதாகவும், இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் கழிவறையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
மாணவர்களின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் ஆனந்த், உடனடியாக கழிவறைப் பகுதிக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, பள்ளியில் கழிவறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாத நிலை குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் பள்ளித் தலைமையாசிரியரை அழைத்து கடுமையாகக் கண்டித்த அமைச்சர், கழிவறைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது, வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே கழிவறையைச் சுத்தம் செய்கிறீர்கள் என்பது முதலமைச்சருக்குத் தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனக் கூறி தலைமையாசிரியரைக் கடிந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
மாணவரின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் ஆனந்த், உடனடியாக போக்குவரத்துத்துறை அமைச்சரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அப்போது மாணவரும் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் நேரடியாகப் பேசியதைத் தொடர்ந்து, கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களின் அடிப்படை வசதிகள் குறித்த புகார்களை அமைச்சர் நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.