நடுரோட்டில் குடிபோதையில் தகராறு – 20 நிமிடங்கள் பேருந்து போக்குவரத்து பாதிப்பு!
தந்தை பெரியார் நகர் பகுதியில் பொதுமக்கள் அச்சம் – இரவு நேரங்களில் தொடரும் தகராறுகளால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் இரவு நேரத்தில் குடிபோதையில் சிலர் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையின் நடுவே நின்று கொண்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சாலையில் சுமார் 20 நிமிடங்கள் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தந்தை பெரியார் நகர் பகுதியில் இரவு நேரங்களில் இதுபோன்ற தகராறுகள் அடிக்கடி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தந்தை பெரியார் நகர் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, இரவு நேரங்களில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு, பொது இடங்களில் குடிபோதையில் தகராறில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.