
இலவசமாக மூலிகைக் கஞ்சி வழங்கிய அறக்கட்டளையினரிடம் ரூ.500 அபராதம் கேட்டு மிரட்டல்? – மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
விழுப்புரம், நவ.11-
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வள்ளலார் மூலிகைக் கஞ்சி வழங்கியபோது, நகராட்சி ஊழியர்கள் எனக் கூறப்படும் இருவர் தங்களிடம் ரூ.500 அபராதம் கேட்டு மிரட்டியதாக அறக்கட்டளை நிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் புறவழிச்சாலையில் திருவாமாத்தூர் சாலை அருகே உள்ள பைபாஸ் சிட்டி பகுதியில் திருஅருட்பா ஆ. பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் நாள்தோறும் வள்ளலார் மூலிகைக் கஞ்சி தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று (11.11.2026) காலை சுமார் 7.30 மணியளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சி வழங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரிந்த இருவர் அங்கு வந்து, கஞ்சி வழங்குவதற்கு பேப்பர் கப் பயன்படுத்துவது ஏன் என்றும், இதற்காக ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதற்கு அறக்கட்டளையினர், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பயோ பேப்பர் கப்புகளையே பயன்படுத்தி கஞ்சி வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த இருவரும் தகராறு செய்து, அறக்கட்டளை நிர்வாகி கா. தமிழ்வேங்கை மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் மிரட்டும் தொனியில் பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வாரம் மீண்டும் கஞ்சி வழங்க வந்தால் பொருட்களைப் பறிமுதல் செய்து விடுவோம் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கா. தமிழ்வேங்கை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசமாக மூலிகைக் கஞ்சி வழங்குவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.#news32 #TN32NEWS