திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பயங்கர கோஷ்டி மோதல்: இருதரப்பு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு!
திண்டிவனம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரங்கபூபதி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
வாக்குவாதம் முற்றவே தள்ளுமுள்ளு!
கூட்டத்தின் போது, மாவட்டத் தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், மாநில தலைமைக்குக் கட்டுப்படாமல் தனது ஆதரவாளர்களைப் புதிய நிர்வாகிகளாக நியமிப்பதாகவும் கூறி நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பழைய நிர்வாகிகளே தொடரலாம் எனத் தலைமை அறிவித்திருந்தும், புதிய நிர்வாகிகளை நியமித்தது குறித்து விக்கிரவாண்டி நகரத் தலைவர் குமார் கேள்வி எழுப்பினார். அப்போது மாவட்டத் தலைவரின் கார் ஓட்டுநர் அய்யப்பன், குமாரைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் இரு கோஷ்டியினரிடையே பயங்கர தள்ளுமுள்ளு மற்றும் மோதல் வெடித்தது!
மாவட்டத் தலைவருக்கு முற்றுகை:
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மாவட்டத் தலைவரைச் சூழ்ந்துகொண்ட நிர்வாகிகள், மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவதாகவும், கட்சி கூட்டத்தில் ஓட்டுநருக்கு என்ன வேலை என்றும் கேள்வி எழுப்பி முற்றுகையிட்டனர். மேலும், தன்னிச்சையாகச் செயல்படும் மாவட்டத் தலைவரை மாநிலத் தலைமை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து ஓட்டுநரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
#Tindivanam #CongressParty #PoliticalClash #CongressProtest #LocalPolitics #BreakingNews #LiveNews #TN32News