திண்டிவனம் அருகே சூரிய வார பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பிரதோஷம் "சூரிய வார பிரதோஷமாக" பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் சூரிய வார பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் உற்சவர் திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரருக்கு பால், தயிர், பச்சரிசி மாவு, மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர் மற்றும் கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கு சோடச உபசார பூஜைகள் செய்யப்பட்டன. நந்தி பகவான், மூலவர் எமதண்டீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோர் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். சிறுவர்களின் சங்கொலி முழங்க, பக்தர்கள் "ஓம் நமச்சிவாய" என பக்தி கோஷமிட்டபடி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32
👍 எங்கள் பக்கத்தை பின்தொடர்ந்து, உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்!
#Tindivanam #Villupuram #Pradosham #ShivaTemple #News32 #TN32News #LiveNews #LocalNews #SpiritualNews