Public App Logo
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் இருளில் தவிப்பு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் இந்த பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுவதால், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் பயணிகள் நிழற்குடை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால், பெண்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பகுதியில் ஏற்கனவே பகல் நேரத்திலேயே ஆசிட் வீச்சு போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இரவு நேரத்தில் இருள் நிலவுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பழைய பேருந்து நிலையத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்து, பயணிகள் நிழற்குடை மற்றும் பேருந்து நிலையம் முழுவதும் போதிய வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. - Viluppuram News