#BREAKING: விழுப்புரத்தில் கொடூரம்.. பெற்ற மகளையே ஏரியில் மூழ்கடித்துக் கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன் அதிரடி கைது!
திருமணத்தை மீறிய உறவில் பிறந்த 24 மணி நேரமே ஆன பெண் குழந்தையை, ஏரி நீரில் மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்த இருவரை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண், பிரசவத்திற்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே மருத்துவமனைக்குத் தெரியாமல் குழந்தையுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சுதாவின் வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.
போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகின:
யோகலிங்கம் என்பவருடன் சுதாவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
இதனால் கர்ப்பமடைந்த சுதா, தனது கணவரிடம் "வயிற்றில் கட்டி" இருப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
குழந்தை பிறந்ததால் உண்மை தெரிந்துவிடும் எனப் பயந்து, கள்ளக்காதலன் யோகலிங்கத்துடன் சேர்ந்து குழந்தையை ஏரி நீரில் அமுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
சடலம் வெளியே வராமல் இருக்க, குழந்தையின் உடலில் கற்களைக் கட்டி ஏரி நீரில் வீசியுள்ளனர்.
தற்போது ஏரியிலிருந்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், கொடூரத் தாய் சுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் யோகலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
#Viluppuram #News32