விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் பேனர் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அதிருப்தி
விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில், குறிப்பாக நான்குமுனை சந்திப்பு பகுதியில், ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு நான்குமுனை சந்திப்பு பகுதியில் விளம்பர பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னாள் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கல்பனா பணியில் இருந்தபோது, அந்த பகுதியில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் பணியிட மாற்றத்திற்குப் பிறகு அந்த எச்சரிக்கை அகற்றப்பட்டதாகவும், தற்போது மீண்டும் கட்டுப்பாடின்றி பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, நான்குமுனை சந்திப்பில் பேருந்துகளில் ஏறி இறங்கும் பயணிகளுக்கு பேனர்கள் பெரும் இடையூறாக இருப்பதாகவும், போக்குவரத்து பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்திற்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய ஆய்வு மேற்கொண்டு, விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றி, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.