நவராத்திரி விழா களைகட்டும் நிலையில் கரடிப்பாக்கத்தில் கொலு பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்! | விழுப்புரம்
நவராத்திரி விழாவையொட்டி விழுப்புரம் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் கைவினை தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
காகிதக்கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் வண்டல் மண் உள்ளிட்ட இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி அரை அடி முதல் 3 அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர், முருகர், ஆண்டாள், மீனாட்சி, காமாட்சி, காளியம்மன், பைரவர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வடிவங்களில் பொம்மைகள் தயாராகி வருகின்றன.
கரடிப்பாக்கத்தில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள் விழுப்புரம் மட்டுமின்றி சென்னை, பெங்களூரு, மைசூரு, ஓசூர், கோவை, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா மற்றும் ஆந்திராவுக்கும் ஆர்டர்களின் அடிப்படையில் அனுப்பப்பட உள்ளன.
மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொம்மைகளின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கைவினை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொம்மைகள் தயாரிக்க தேவையான வண்டல் மண் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், அருகிலுள்ள ஏரிகளில் இருந்து வண்டல் மண் எளிதாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரம்பரிய கைவினைத் தொழிலை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வரும் தொழிலாளர்களின் உழைப்பில், நவராத்திரிக்கான கொலு பொம்மைகள் தற்போது உருவாகி வருகின்றன.
#TN32NEWS #விழுப்புரம் #Villupuram #கரடிப்பாக்கம் #நவராத்திரி #Navaratri #கொலுபொம்மைகள் #GoluDolls