அங்கன்வாடி ஊழியர்கள் கொந்தளிப்பு! இன்ஸ்டாகிராம் பெண் மீது விழுப்புரம் எ.ஸ்பி. அலுவலகத்தில் புகார்!
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு, முட்டை, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஊழியர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த அவதூறு வீடியோ அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் பெரும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் பேசிய அந்தப் பெண்ணை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் திரண்டு வந்து அதிரடியாக புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அங்கன்வாடி ஊழியர்கள், "குழந்தைகளுக்கு அரசு வழங்கும் பொருட்களை நாங்கள் ஒருபோதும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதில்லை. இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் எங்களைப் பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல், சமூக வலைதளங்களில் விளம்பரத்திற்காக இதுபோன்ற அவதூறு கருத்துக்களைப் பரப்புவது பெரும் மனவேதனையை அளிக்கிறது. எனவே, பெண் பணியாளர்களை இழிவுபடுத்திய அந்தப் பெண் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சம்பவத்தால் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை அறிய நமது பக்கத்தை பின்தொடரவும்! 👇
👉https://www.facebook.com/tnnews32
#Viluppuram #AnganwadiWorkers #Protest #SocialMedia #InstagramControversy #TamilNaduNews #BreakingNews #News32 #TamilNews