
சிங்கப்பெண் படையில் உதவி ஆய்வாளர் இல்லாததால் போலீசார் அவதி
உடனடியாக எஸ்.ஐ. நியமிக்க கோரிக்கை
விழுப்புரம்:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு காவல் படை, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், குற்றச்சம்பவங்களை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் படையில் 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 போலீசார் பணியமர்த்தப்பட்டு, ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீசார் என குழுக்களாக பிரிந்து பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சிங்கப்பெண் படையில் உதவி ஆய்வாளர் பணியில் இல்லாததால், பெண்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
உதவி ஆய்வாளர் இல்லாததால், சில நேரங்களில் குற்றச்சம்பவங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் போலீசாரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் முக்கியத்துவம் வாய்ந்த சிங்கப்பெண் படைக்கு உடனடியாக உதவி ஆய்வாளரை நியமித்து, முழுமையான காவல் பணியை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, சிங்கப்பெண் படையின் செயல்பாடுகள் தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.