
அதிரையில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்!
அதிராம்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட மீனவர் அணித் தலைவர் V. வேலாயுதம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை இயக்குநர் (பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை) மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிராம்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தெருக்களில் சுற்றித்திரிவதாகவும், சில நாய்கள் கொக்குகள் போன்ற பறவைகளைக் கடித்துக் கொன்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ள கோரிக்கைகள்:
தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்கள் தொடர்பாகத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாய்களின் உரிமையாளர்கள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பொதுமக்களின் நலன் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினத்தில் தெருநாய்கள் தொல்லை குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் இந்தக் கோரிக்கைக்கு நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
— அதிரை எக்ஸ்பிரஸ் செய்திப் பிரிவு