
‘ஆனை விழுந்தான் குளமா... இல்ல நகராட்சியின் மானப் பிரச்சினையா?!.
அதிராம்பட்டினத்தில் மழை பெய்தால் மக்களுக்கு சந்தோஷமோ இல்லையோ, நகராட்சிக்குத் தான் தொண்டை வறண்டு போகு போல! 'மழை வருதே... மழை வருதே...'னு பாட்டு பாடுறதை விட்டுட்டு, 'ஐயோ! அடுத்தது எதை அடைக்கிறது, எதை திறக்கிறது?'னு யோசிச்சு யோசிச்சு அதிகாரிகளுக்குத் தூக்கமே போயிருச்சாம்.
விஷயம் வேற ஒன்னும் இல்லைங்க... நம்ம ஊரு ஆனை விழுந்தான் குளம் இருக்குதே, அதைச் சுத்தி விடப்பட்டிருந்த கழிவு நீர் குழாய்கள் எல்லாத்தையும் ‘டக்கர்’னு அடைச்சுட்டாங்க. சரி, அடைச்சது தான் அடைச்சாங்க... அந்த கழிவு நீர் எல்லாம் 'நாங்க எங்க போவோம்?'னு யோசிச்சு, சேர்மன் வாடி பகுதியில் இருக்குற கால்வாயில ஒன்னு கூடி 'நாங்க இங்கயே நீச்சல் அடிக்கிறோம்!'னு நிரம்பித் ததும்பி நிற்குது.
போதாத குறைக்கு அதிராம்பட்டினத்துல கனமழையும் பொளந்து கட்டியிருக்கு. கழிவு நீரும் மழை நீரும் ஒன்னு சேர்ந்து, "எங்களை வெளியே விடுங்கடா சாமி!"னு கூச்சலிடாத குறையா எந்நேரமும் உடைப்பு ஏற்படுற நிலைமைக்கு வந்துருச்சு.
உடனே நம்ம 'பெயர் கூற விரும்பாத' அதிகாரி ஒருத்தருக்கு மாஸான யோசனை ஒன்னு தோணியிருக்கு! குளத்தை கஷ்டப்பட்டு தூர்வாரிய அந்த தொண்டு நிறுவன நபர்கள்கிட்ட போயி, "யோவ்! நிலைமை கைமீறி போச்சு... குளத்துக்குள்ள இந்த தண்ணியை திறந்து விடுங்கப்பா!"னு மிரட்டுற பாணியில ‘ரிக்வஸ்ட்’ வச்சிருக்காரு.
அதைக்கேட்ட அந்த தொண்டு நிறுவன ஆளுங்க பதறிப்போய், "அண்ணே! நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு தூர்வாரி சுத்தம் பண்ணி வச்சிருக்கோம்... இதுல போயி கழிவுநீரை விட சொல்றீங்களே? என சொல்ல இவங்க முடியாது என சொல்ல விடுங்க நாளைக்கு காத்தால நான் பாத்துக்கிறேன் சொல்லி துண்டிச்சிட்டாராம்..
நகராட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
ஐயா நகராட்சி நிர்வாகமே! 'வெள்ளம் வருமுன்னே அணை போடணும்'னு பழமொழி தான் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனா இங்க 'பிரச்சினை வருமுன்னே விழிச்சுக்கணும்'ங்கிறதை மறந்துட்டீங்களே!
இனியாவது ஊர் முழுவதும் ஒழுங்கா கழிவு நீர் வடிகால்களை அமைச்சு, தண்ணி முறையா போறதுக்கு வழி பண்ணுமா நகராட்சி?
அல்லது...
பஞ்சாயத்து முடிஞ்சு, தண்ணி ஊருக்குள்ள புகுந்ததுக்கு அப்புறம், ‘ஆய் போன பிள்ளையை போல’ முழிச்சுக்கிட்டு நிற்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்... ஆனை விழுந்தான் குளத்துல தண்ணி நிரம்புதோ இல்லையோ, நகராட்சியின் இமேஜ்ல ஊத்தல் எடுக்காம இருந்தா சரிதான்!