
உயிருக்கு முன் அனைவரும் சமம்!
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாற்றம் தேவை
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் விபத்துகளில் சிக்கியவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் கனிவுடனும் மனிதநேயத்துடனும் அணுகுவது மிகவும் அவசியம்.
விபத்தில் காயமடைந்து வரும் நோயாளியும், அவருடன் வரும் உறவினர்களும் ஏற்கனவே பதற்றத்திலும் அச்சத்திலும் இருப்பார்கள். அந்த நேரத்தில் ஒரு மருத்துவரின் ஆறுதல் வார்த்தையும், செவிலியரின் அக்கறையான அணுகுமுறையும் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும்.
ஆனால், பொதுமக்களிடம் ஒரு விதமாகவும், தங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் சிகிச்சைக்காக வரும்போது மற்றொரு விதமாகவும் கவனம் செலுத்தப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
நான் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம் இதுபோன்ற கேள்வியை எழுப்பியது. ஒரு மக்கள் பிரதிநிதி மருத்துவ ஆலோசனைக்காக வந்தபோது, அவரைச் சுற்றி பல மருத்துவர்கள் உடனடியாக வந்து விளக்கம் அளித்தனர். அதே அக்கறையும், அதே முக்கியத்துவமும் சாதாரண பொதுமக்களுக்கும் கிடைக்கிறதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு கிடைக்கும் மரியாதை குறித்து கேள்வி இல்லை. ஆனால் அதே மனிதநேயமும், அதே அக்கறையும் உயிருக்கு போராடி மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
மருத்துவமனை என்பது யாருடைய சமூகப் பின்னணியையும், சாதியையும், மதத்தையும் பார்க்கும் இடமாக இருக்கக்கூடாது.
உயிருக்கு சாதி இல்லை.
உயிருக்கு மதம் இல்லை.
உயிருக்கு ஏழை–பணக்காரன் என்ற வேறுபாடும் இருக்கக்கூடாது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்துவத் துறைக்கு உள்ளது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பது குறித்து மாவட்ட நிர்வாகமும், மருத்துவத் துறை உயர் அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடையே ஏதேனும் பிரிவினை அல்லது சமூக அடிப்படையிலான வேறுபாடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தால், அதை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
ஒரு அரசு மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு உயிரும் அரசின் பொறுப்பு. அந்த உயிரை மதிப்பது மட்டுமே முதன்மையான கடமை.
இந்த பதிவை நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து எழுதவில்லை. நேரடியாக ஒரு அனுபவத்தை சந்தித்தவன் என்ற முறையில், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய சமமான மருத்துவ சேவை குறித்து கேள்வி எழுப்புகிறேன்.
மாற்றம் தேவை.
மனிதநேயம் தேவை.
அனைவருக்கும் சமமான சிகிச்சை தேவை.
இது இந்த விவகாரம் தொடர்பான இரண்டாம் பாகம் மட்டுமே. மேலும் பல சம்பவங்கள் மற்றும் கேள்விகள் அடுத்தடுத்த பதிவுகளில் .....