
🌧️ தொடர் மழை முன்னெச்சரிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் ஆபத்தான பேனர்களை அகற்ற வேண்டும்!
சாலையோரம், மின்கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் சாரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு பொதுமக்கள் கோரிக்கை!
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த ஒரு வார காலத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் அரசு அதிகாரிகள், வருவாய்த் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினர் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மின்கம்பங்களில் கட்டப்பட்டும் உள்ள பேனர்கள், தொடர் மழை மற்றும் பலத்த காற்றின்போது கீழே விழுந்து விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பேனர்களை மட்டும் அகற்றாமல், அவற்றைத் தாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புச் சட்டங்கள் மற்றும் சாரங்களையும் முழுமையாக அகற்ற வேண்டும். குறிப்பாக, மின்கம்பங்கள் அருகிலும் சாலையோரங்களிலும் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தொடர் மழையால் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.