ஆத்தூர்: ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி தனியார் மகளிர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா
உற்சாக கொண்டாட்டம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்லூரியில் முன்னதாகவே இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன. மேலும் அருகம்புல் மாலை, செம்பருத்தி உள்ளிட்ட மலர் மாலைகள் அணிவித்து, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் விநாயகர் பாராயணம் பாடி, மனமுருகி விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் மாணவிகள் உற்சாகமாக “கணபதி பாப்பா மோரியா” என முழக்கமிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
தொடர்ந்து ஏழு நாட்களுக்கு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விநாயகர் சிலையை அருகிலுள்ள ஆற்றில் கரைத்து விழாவை நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Attur, Salem | Sep 11, 2026